search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி நிர்வாகி பலி"

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி நிர்வாகி ஒருவர் இன்று பலியானார். #swineflu
    நெல்லை:

    தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகளவில் இருக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை சுமார் 17 பேர் வரை பலியாகி உள்ளனர். இதனால் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒவ்வொரு யூனியன் பகுதியிலும் 3 வாகனத்தில் டாக்டர்கள் அடங்கிய குழு வினர்களும், மற்ற பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வார்டில் தற்போது 20 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று பலியானார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ஆலங்குளம் அருகே உள்ள கோவிலூற்று கிராமத்தை சேர்ந்தவர் வேலவன் (வயது45). இவர் கோவிலூற்று அருகே உள்ள பூலாங்குளத்தில் நடுநிலைப்பள்ளி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. அதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ரத்த பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து வேலவன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வேலவன் இன்று பரிதாபமாக இறந்தார்.

    இதைத்தொடர்ந்து மருத்துவகுழுவினர் அவரது குடும்பத்தினர்களுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார்கள். #swineflu
    ×